பூஷணிப் பூ

பூஷணிப் பூ இல்லை, பறங்கிப் பூ வைப்பார்கள். இது ஒரு காலத்தில் திருமணத்திற்கு எனப் பெண் அல்லது பிள்ளை இருப்பவர்கள் வீடுகளில் மட்டுமே வைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. பின்னர் நாளாவட்டத்தில் அனைவரும் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உத்தராயன காலத்தில் திருமணம் செய்வது விசேஷம் என்பதால் மார்கழி பிறக்கும்போதே பெண்ணுக்குப் பிள்ளையோ, பிள்ளைக்குப் பெண்ணோ தேடுபவர்கள் கோலங்களில் இப்படிப் பூக்களை வைப்பார்கள். சாணம் வைப்பது பிள்ளையாரை நினைவு கூர்ந்தே. பிள்ளையாரை எப்படி வேணாப் பிடிக்கலாம், களிமண், சாணம், மஞ்சள்னு எதிலே வேண்டுமானால்.

வீடுகளில் தேள் யாருக்கானும் கொட்டினால் தேளை அடிக்கத் தேடும்போது கிடைக்கவில்லை எனில் வெல்லத்தைக் கிள்ளிப் பிள்ளையார் பிடித்து வேண்டுவார்கள். பிள்ளையார் மேல் ஆணை என்று சொல்வார்கள். தேளும் கிடைக்கும். ஹிஹிஹி, அந்த வெல்லத்தைச் சாப்பிடப்போட்டி எல்லாம் போட்டிருக்கோமாக்கும்!


மறந்துட்டேனே, தினம் இப்படிப் பிடித்து வைக்கும் பிள்ளையார்களைப்பொங்கல் கழிந்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்து வழிபாடுகள், நிவேதனங்கள் செய்து தேரில் வைத்து ஊர்வலம் எடுத்துச் சென்று ஆற்றிலோ, குளம், கடலில் கரைக்கும் வழக்கம் இருந்ததாய்த் தெரிகிறது. இப்போல்லாம் விநாயக சதுர்த்திக்கு நடக்குது.


எல்லாப் பூக்களிலுமே (கொடியில் காய்க்கும், கறிகாய்களுக்கான செடியில் பூக்கும் பூக்கள்) ஆண் பூ, பெண் பூ என இருவகை உண்டு. ஆண் பூ பூ மட்டுமே இருக்கும். பெண் பூவில் கீழே காய்ப் பிடிப்புப் போல் சின்னதாய் இருக்கும். பறங்கி என்றால் சின்னதாய் ஒரு நெல்லிக்காய் அளவு, புடலை என்றால் குழந்தை விரல் அளவு, பீர்க்கை, பாகல் என எல்லாத்துக்கும், கொடியில் காய்க்கும் அனைத்துவகைகளுக்கும் இப்படியே இருக்கும். பின்னர் ஆண் பூக்கள் உதிர்ந்துவிடும் மகரந்தச் சேர்க்கைக்குப் பின்னர். பெண் பூக்கள் காய் பெரிதாக ஆகும்வரையும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும். காய் பெரிதாய் ஆனதும் உதிரும், அந்த இடம் தான் குழிவாய் நமக்குத் தெரியும். கீழே காம்பு இருக்கும். பறங்கிப் பூ ஆண் பூவைத் தான் வைப்பார்கள். பறிக்கும்போதே பார்த்துப் பறிக்கச் சொல்வார்கள். மேலும் பூக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களோ, ஆண்களோ கண்டுபிடிக்கலாம் என்றும் சொல்வார்கள்.

Comments