முதலில் மாணிக்கவாசகர் பற்றிய சிறு குறிப்பு:

காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே வாதவூரார் எனவும் அழைக்கப் பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான்.

எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை. என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல் மக்கள் பணியே மகேசன் பணி எனத் தொண்டாற்றி வந்தார். ஒரு சமயம் சோழநாட்டுக் கடற்கரையில் நல்ல குதிரைகள் வந்திருப்பதைக் கேள்விப் பட்ட மன்னன் தன் குதிரைப் படைக்கு அவற்றை வாங்க நினைத்து திருவாதவூராரிடம் வேண்டிய பொருளைக் கொடுத்துக் குதிரைகள் வாங்கி வர அனுப்பி வைத்தான். பரிவாரங்கள் உடன்வர வாதவூரார் சொக்கநாதரைத் தொழுதேத்திவிட்டுக் கிளம்புகிறார்.

திருப்பெருந்துறை என்னும் ஊரைக் கடந்தே குதிரைகள் வந்திருக்கும் துறையை அடையவேண்டும். திருப்பெருந்துறைக்கு அருகே செல்லும்போது அங்கே ஓர் அழகான சோலையில், "ஹர ஹர" என்ற சிவநாம முழக்கம் கேட்டது. வாதவூரார் மனம் உருகி சோலையை நோக்கிச் சென்றார். அங்கே ஓர் குருந்த மரத்தினடியில் தன் சீடர்கள் புடைசூழக் குருவாக அமர்ந்திருந்த ஈசனைக் கண்டு மெய்ம்மறந்தார் வாதவூரார். கண்ணீர் சோர ஈசனின் திருவடிகளில் விழுந்து பணிந்து, தம்மை ஆட்கொள்ளவேண்டும் என வேண்ட, ஈசனும் அவர் பால் மனம் கனிந்து அவருக்கு உண்மைப் பொருளை உபதேசித்தார். பேராநந்தப்பெருவெள்ளத்தில் திளைத்த வாதவூரார் ஈசனின் அடிகளை நினைந்து நினைந்து மனம் உருகித் தம்மை மறந்து அழகிய தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைவனுக்குப் பாமாலை சூட்டினார். அவற்றைக் கேட்ட ஈசன் மனம் மகிழ்ந்து ஒவ்வொன்றும் மாணிக்கம் போன்று மாசற்று ஒளிவீசித் திகழும் பாக்கள் எனப் பாராட்டிவிட்டு, வாதவூராரின் பெயரை இனி மாணிக்கவாசகர் என அழைக்கவேண்டும் என்ற சிறப்புப் பெயரையும் சூட்டினார். சில நாட்கள் இங்கே தங்கி எமக்குப் பணிவிடைசெய்வாயாக என மாணிக்க வாசகரைப் பணித்துவிட்டு ஈசன் மறைகிறார்.

ஓர் அமைச்சனாக சர்வ பரிவாரங்களோடும், படைகளோடும் அரசவை வேலைக்குரிய ஆடைகள் அணிந்து வந்த மாணிக்க வாசகர் இப்போது அனைத்தையும் துறந்தார். ஓர் மெய்த்துறவியாக மாறினார். எந்நேரமும் சிவநாமமே தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வெண்ணீறணிந்து ஈசன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு அதனால் மனம் கனிந்து கண்ணீர் பெருக்கி ஈசன் நினைவாகவே இருந்தார். தாம் கொண்டு வந்த பொருளை எல்லாம் திருக்கோயில் பணிகளுக்கு எனச் செலவிட்டுவிட்டார். குதிரைகள் வாங்கவே இல்லை. மாணிக்கவாசகரின் இந்தச் செயல் மன்னன் காதுகளுக்கு எட்ட அவரின் பக்திக்காக அரசாங்கப் பணத்தைச் செலவிட்டுவிட்டாரே எனக் கோபம் கொண்ட மன்னன் அவரை உடனே குதிரையுடன் வருமாறு ஓலை அனுப்பினான்.

எங்கே போவது குதிரைகளுக்கு?? மாணிக்கவாசகர் பெருந்தூக்கத்திலிருந்து விழித்தவர் போலானார். பாண்டியனது ஓலையைக் கண்டதும் செய்வதறியாது துடித்தார். பெருந்துறைப் பெருமானிடமே வேண்டினார். அவரின் துன்பம் கண்டு மனம் பொறுக்காத ஈசன், அவரைப் பாண்டிய நாடு செல்லுமாறும் தாம் ஆவணி மாதம் மூல நக்ஷத்திர தினத்தன்றுக் குதிரைகளோடு வருவதாயும் கூறி, ஒரு மாணிக்கக் கல்லையும் கொடுத்து அதை மன்னனுக்குக் கையுறையாகக் கொடுக்குமாறும் கூறினார். ஈசனின் இந்த வாக்குறுதியால் மனம் தெளிந்த மாணிக்க வாசகர் மதுரை புறப்பட்டுச் சென்றார். மதுரையை அடைந்து பாண்டியனைக் கண்டு மாணிக்க மணியைக் கொடுத்ததுமே மன்னனின் கோபம் சற்றுத் தணிந்தது. குதிரைகளும் வந்து சேரும் என்ற செய்தியும் கேட்ட மன்னன் தனக்குச் செய்தி தவறாய் வந்திருக்கிறது, மாணிக்க வாசகர் தவறு செய்யவில்லை என நினைத்து மனம் மகிழ்ந்தான். அவருக்கு முதல் அமைச்சருக்குரிய மரியாதைகளைச் செய்து சிறப்பித்தான்.

நாளை மூல நக்ஷத்திரம். ஆனால் இன்று வரை குதிரைகள் வரவே இல்லையே?? மன்னன் கோபம் அடைவானே?? மாணிக்கவாசகர் தவிக்க, மன்னனுக்கு மீண்டும் சந்தேகம் வர, ஒற்றர்களை அனுப்பி விசாரித்து வரச் செய்திருந்தான். அவர்கள் கூறிய தகவல்களால் உண்மை தெரியவர மன்னனுக்குக் கோபம் எல்லை மீறியது. மாணிக்க வாசகரைச் சிறையில் போட்டு அவரிடம் கொடுத்த பொருளை எல்லாம் அவர் திரும்பத் தர நிர்ப்பந்திக்குமாறு ஏவலாளர்களை ஏவினான். அவ்வாறே சென்ற மன்னனின் ஏவலாளர்கள் மாணிக்க வாசகரைச் சிறையிலிட்டுத் துன்புறுத்தினார்கள். மாணிக்கவாசகர் ஈசனை நினைந்து மனம் ஆறுதலுடன் அவன் நினைவாகவே இருந்தார். எவ்வாறேனும் ஈசன் வந்து தன்னைக் காப்பான் என்ற உறுதியுடன் இருந்தான்.

அந்த சர்வேசனோ தன் அடியார்கள் துன்புறத் தான் இன்புறுவானா? அவனுக்கு எல்லாமே விளையாட்டுத் தான் என்றாலும் அடியாரைச் சோதனை செய்வது என்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது மாணிக்கவாசகர் சிறையில் வருந்துவதைக்கண்டதும், சோதனை போதுமெனக் கருதிக் குதிரைச் சேவகனாக வேடமிட்டுக்கொண்டுக் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் பரிகளாக்கினார். என்னே இறைவன் திருவிளையாடல்? அவன் நினைத்தால் குதிரைகளையே கொடுத்திருக்கலாம் அல்லவா?? மீண்டும் ஏன் இப்படிச் செய்கிறான்? மாணிக்கவாசகரின் பெருமையை மன்னன் அறியவேண்டும் என்பதோடு ஒரு சாமானியப்பெண்ணான வந்தி என்னும் கிழவிக்கும் இதன் மூலம் நன்மை செய்யவேண்டும். மன்னனும் குடிமக்கள் அனைவரும் தம் பிள்ளைகளே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அனைத்துக்குடிமக்களையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும் என்பதற்காகவுமே. மன்னன் என்ற மமதை இருக்கக் கூடாது என்பதால்.

நரிகளைப் பரிகளாக்கிய ஈசன் அவற்றை மன்னனிடம் அளிக்கக் குதிரைகளைப் பார்த்துப் பிரமித்த மன்னன் மனம் மகிழ்வடைந்து வாதவூராரைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்கிறான். குதிரைகளை எல்லாம் குதிரைச்சேவகனாக வந்த ஈசன் முறைப்படி நடத்திக்காட்டிக் கயிறு மாற்றி மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். அன்றிரவு குதிரை லாயத்தில் நரி ஊளையிடும் சப்தம். ஏற்கெனவே லாயத்தில் இருந்த குதிரைகள் கனைத்துக்கொண்டும், கால்மாற்றி வைத்துக்கொண்டும் அவஸ்தைப்பட்டன. என்னவென்று பார்த்தால் குதிரைச் சேவகன் கொடுத்த குதிரைகளெல்லாம் நரிகளாய் மாறியதோடல்லாம, ஏற்கெனவே இருந்த குதிரைகளையும் கடித்துக் கொன்று அவைகளுக்கு ஊறுகள் விளைவித்துக்கொண்டிருந்தன. இவர்களைப் பார்த்ததும் அனைத்தும் ஓடி மறைந்தன. மன்னின் கோபம் இப்போது கட்டுக்கடங்காமல் போகவே மாணிக்கவாசகரைக்கூட்டி வந்து அவர் முதுகில் கற்களை ஏற்றி வையை நதியின் நடுவில் நிறுத்தித் துன்புறுத்தினான். ஆனால் அப்போதும் மாணிக்க வாசகர் திருவாசகப் பாடல்களைப் பாடி மனம் ஆறுதல் கொண்டார்.

எனினும் தம் அன்பர் துன்புறுவதை ஈசன் பொறுப்பானா?? வையையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம். கரை புரண்டு ஓடிற்று. எப்படி அடைத்தாலும் வெள்ளம் அடைபடவே இல்லை. பாண்டியன் அணைபோட்டு வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். வீட்டுக்கு ஒருவர் என மதுரை நகரின் ஆண்கள் அனைவரும் வெள்ளத்துக்கு அணை போட வரவேண்டும் என ஆணையிட்டான். அங்கே வந்தி என்னும் மூதாட்டி ஒருத்தி பிட்டுச் சுட்டு விற்று வாழ்க்கை நடத்தி வந்தாள். அவளுக்கென அளந்து விட்டிருந்த பங்கை அடைக்க ஆளே இல்லாமையால் மனம் வருந்தி ஈசனே துணை என முறையிட்டாள்.
வந்தார் ஈசன். தலையில் முண்டாசு, தோளில் மண்வெட்டி. அரைப்பாய்ச்சுக் கட்டிய வேட்டியோடு வந்தார். வந்திக்கிழவியிடம் தான் அவளின் பங்குக்கு உள்ள வேலையைச் செய்வதாய்க் கூறத் தன்னால் கூலியும் கொடுக்க இயலாது என அவள் மனம் வருந்தினாள். கூலியைப்பணமாய்க் கொடுக்க வேண்டாம் எனவும், பிட்டாய்க் கொடுக்குமாறும் ஈசன் வேண்ட, திகைப்புற்ற வந்தி பின்னர் அதற்குச் சம்மதித்தாள். ஆயிற்று கூலியாளை வேலைக்கு அனுப்பவேண்டும். அவனோ முதலில் உணவைக் கொடு உண்டுவிட்டுப் போகிறேன் என்றான். சரி என்று பிட்டைக் கொடுத்தால் உண்டுவிட்டு, உண்டபின்னர் உறங்குவது என் வழக்கம் உறங்கிவிட்டு வருகிறேன் என்று உறங்க ஆரம்பித்தான்.

மிகவும் கஷ்டத்தோடு அவனை எழுப்பி வேலைக்கு அனுப்பினாலோ, உறங்கி எழுந்த பின்னர் உண்ணவேண்டாமா என்றான். ஒருவழியாக அவனைச் சமாளித்து வேலைக்கு அனுப்பினால் மண்வெட்டியால் மண்ணை ஒரு முறை அள்ளுவான். பின்னர் நிமிர்ந்து ஓய்வெடுப்பான். பெருமூச்சுவிட்டுக்கொண்டே சும்மாட்டை அவிழ்த்து மண்ணைக் கொட்டுவது போலத் தட்டுவான். மீண்டும் மண்வெட்டியால் ஒரு போடு , மீண்டும் மேற்சொன்னவை அனைத்தும் நடக்கும். அதற்குள் பசி வந்துவிடும், பிட்டுச் சாப்பிடப் போவான். சாப்பிட்டதும் உறக்கம் வந்துவிடும். அப்படி ஒருமுறை உறங்கும்போது மேற்பார்வை பார்த்தவர்கள் கூறிய தகவலின் படி வந்தியின் பங்கு அடைபடாமல் இருப்பதைக் கவனிக்க வந்தான் மன்னன்.

வந்தால் வந்தி நியமித்த ஆள் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால் அவன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடித்து எழுப்பினான். சுளீர்! என்ன இது? அடித்தது மன்னன், அடி வாங்கியதோ, வந்தியின் கூலியாள்! ஆனால் மன்னனின் முதுகில் அடி விழுந்த உணர்வு! மன்னன் திகைக்க அங்கிருந்த மக்கள் அனைவருக்குமே அந்த அடி முதுகில் பட்டது. அனைவருமே அடி வாங்கிய உணர்வில் அலறித்துடிக்க, வாதவூராருக்கு எந்த அடியுமே படவில்லை. அவ்வளவில் கரை தானாக அடைபட்டுப் போக கூலியாள் மறைந்தான். வாதவூரார் உண்மையை உணர்ந்து ஈசனைப் போற்றிப் பாடினார். பாண்டியனுக்கு அப்போது தான் வாதவூராரின் பெருமையும், வந்தியின் பக்தியும், தன் மமதையும் புரிந்தது. மன்னனை மன்னித்து அருளுமாறு வாதவூரார் வேண்ட அவ்வாறே ஆகட்டும் என ஈசன் திருவருள் புரிந்தார்.

அதன்பின்னர் அமைச்சர் பதவியைத் துறந்த மாணிக்கவாசகர் பல ஊர்களுக்கும் தல யாத்திரை மேற்கொண்டார். திருப்பெருந்துறை, திரு உத்தரகோசமங்கை போன்ற ஊர்களுக்குச் சென்று தில்லையை அடைந்தார். அங்கே தில்லை வாழ் அந்தணர்களோடு வாதப் போருக்கு வந்த புத்த பிக்ஷுவை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார். தில்லையம்பலவாணன் மாணிக்கவாசகர் கூறத் தன் திருக்கைகளால் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எழுதிக்கொண்டு கடைசியில் திருவாதவூரன் சொல்லத் திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது எனக் கைச்சாத்திட்டுவிட்டுக் கனகசபையில் அவற்றை வைத்துவிட்டு மறைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் அந்தச் சுவடியைக் கண்டு வியந்து மாணிக்கவாசகரிடம் காட்டிப் பொருள் கூறி விளக்கும்படி வேண்ட, அவரோ அனைத்துக்கும் பொருளே இந்தப் பரம்பொருள் எனக்கூறி தில்லையம்பலவாணனின் திருவடிகளில் சென்று மறைந்தார்.

Comments