பாதம் பணிந்தொருக்கு பரிவு காட்டும் பழம்கரை பரமன்


தமிழகத்தின் பெரிய மண்டலங்களில் கொங்கு நாட்டிற்கென்று தனிச்சிறப்பும், தெய்வீகப் பெருமையும் உண்டு. தன்னிகரற்று விளங்கும் ஏராளமான சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது கொங்கு நாடு என்னும் புண்ணிய பூமி.

புகழ்பெற்ற அவிநாசி திருத்தலத்திற்கும், கிழக்கே திருமுருகன் பூண்டிக்கும் வடதிசையில் உள்ளது, 1500 ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கரை என்னும் திருத்தலம். காலத்தின் சீற்றத்தில் மறைந்துவிட்டாலும், மக்கள் மனங்களிலிருந்து மறையாது எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ சுரும்பார் பூங்குழல்நாயகி உடனுறை
ஸ்ரீ முன்தோன்றீஸ்வரர் பெருமானின் திருக்கோயில் இன்றும் தெய்வீகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.

பழங்கரை ஊரும், திருக்கோயிலும் காலத்தால் மூத்தவை ஆகும். இவ்வூரையும், ஸ்ரீ முன்தோன்றீஸ்வரரைப் பற்றியும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இத்திருக்கோயிலுக்காக கொங்கு நாட்டுப் பெரியவர்கள் நிலமாகவும், பொன், பொருள், வைர அணிகலன்களாகவும் அளித்த செல்வம் கணக்கிலடங்கா.

அன்னியர்களின் ஏராளமான படையெடுப்புகளின்போது தமிழகமே நிலைகுலைந்து, ஆங்காங்கே மக்கள் பல் லாயிரக்கணக்கில் உயிர் பிழைப்பதற்காக ஓடி, பல்வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்விதம் விபரீத அளவிற்குப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கொங்கு நாடும் ஒன்று. வானமே இழந்து தலைமேல் விழுந்துவிட்டது போன்ற அந்நிலையி லும்கூட கொங்கு நாட்டு மக்கள் தங்கள் தெய்வ பக்தியை விட்டுவிடவில்லை.

ஆதலால்தான்,கொங்கு நாட்டின் மிகப் புராதனமான பொக்கிஷங்களான திருக்கோயில்களை இன்றும் நம்மால் தரிசிக்க முடிகிறது.

பழங்கரை என்னும் தெய்வீகச் செல்வம்!
தலைமலையை வடக்கு எல்லையாகவும், பழநி மலையைத் தெற்கு எல்லையாகவும், கோவைக்கு மேற்கிலுள்ள வெள்ளியங்கிரி திருமலையை மேற்கெல்லையாகவும்,குளித்தலையைக் கிழக்கெல்லையாகவும் கொண்டு விளங்குகிறது கொங்கு நாடு.

சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டுகளில் பழங்கரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.பண்டைய காலத்தில் பழனை என்ற பெயரால் புகழ்பெற்று விளங்கிய ஊரே இப்போது பழங்கரை என அழைக்கப்படுகிறது. பழங்கரையின் முன்தோன்றீஸ்வரமுடையார் திருக்கோயில் கல்வெட்டுகளில் இத்திருத்தலம் ‘பழங்கராய நல்லூர்’, ‘பழங்கரையூர்’ என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் நீர்வளமும், நிலவளமும் நிறைந்திருந்ததற்குக் காரணமான காட்டாற்றின் குறுக்கே மன்னர்களால் அணை கட்டி, நீரைத் தேக்கி, அதனால் நெல் விளைந்த நிலங்கள் மிகுந்திருந்ததால், இத்திருத்தலத்திற்கு ‘அணைச்சுப்பூண்டி’ என்ற பெயரும் ஏற்பட்டது. வீர ராஜேந்திரன் மன்னன் காலத்துக் கல்வெட்டில் (கி.பி. 1214), இப்பெயர் இருந்ததை வெளிப்படுத்து கிறது.

அவிநாசி நகரின் கிழக்கில் அமைந்துள்ள சாலிங்க சமுத்திரம் எனப்படும் மிகப்பெரிய குளமும் பழங்கரையின் நீர் வளத் திற்கும், நில வளத்திற்கும், குடிகளின் வளத்திற்கும் காரணமாக இருந்ததையும் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது.

திருக்கோயில் நிர்வாகம்!

கல்விக் கேள்விகளிலும், தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கிய பெரியோர்கள் கொண்ட ஊர் நிர்வாகச் சபை, ஊரை மட் டுமின்றி திருக்கோயிலையும் நிர்வகித்து வந்துள்ளது. புகழ்பெற்ற இத்திருக்கோயிலின் செல்வச் செழிப்பைப் பற்றியும், மன் னர்களால் அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றியும் வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1207-1256) கல்வெட்டுகள் மூன்றும், விக்கிரம சோழ மன்னன் (கி.பி. 1273-1303) கல்வெட்டு ஒன்றும், விஜயநகர மன்னர் அச்சுதராயன் (கி.பி. 1530-1542) கல்வெ ட்டுகள் இரண்டும் பழங்கரை ஸ்ரீமுன்தோன்றீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய பல விவரங்களை வெளிப்படுத்துகின்றன.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கரை க்ஷேத்திரம் இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் பெயரால் முன்தோன் றீஸ்வரம் என்று பிரசித்திபெற்று விளங்கியது. கொங்கு சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் பெருமளவில் செய்யப்பட்டதால் இத்தலப் பெருமானுக்கு சோழீஸ்வரர் என்ற திருப்பெயரும் பிற்காலத்தில் வழங்கலாயிற்று.
கோள்கள், இப்பேரண்டம், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன்பே உள்ளவன் திருக்கயிலைபதியான சிவபெருமான் என்பதால் பழங்கரை பெருமானுக்கு முன்தோன்றீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சிவஞான யோகிகள் அருளியுள்ளனர்.

மாணிக்கவாசகப் பெருமான் தனது திருவெம்பாவையில்,
‘முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனே...’

என்று பாடியுள்ள நுட்பத்தை எண்ணிப் பார்த்தால் இந்த அண்ட சராசரங்கள் தோன்றுவதற்கு முன்னைப்பழம்பொருட்கள £கிய நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் ஆகிய ஐந்து மூலப்பொருட்களே காரணம் என்பதையும், இந்த ஐந்து இயற்கை மூலப்பொருட்களும் தோன்றுவதற்கு முதற்காரணம் அந்த சிவபெருமானே என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதனைத்தான் ஆன்றோர்களும், சான்றோர்களும் பரமானந்தமடைந்து முந்தைய, முதல், நடு, இறுதியுமான சர்வேஸ்வரனை முன்தோன் றீஸ்வரன் என்று பூஜித்து வந்தனர்.

பொன் சோழீஸ்வரர்!
தற்போது இத்திருக்கோயில் பொன் சோழீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் புகழ்பெற்று வி ளங்கிய இத்திருத்தலம் இப்போது ஒரு சிறிய கிராமமாக உள்ளது. ஊர் மறைந்துவிட்டாலும், அதன் பெயர் மறையாமல் ‘பழங்கரை அஞ்சல் நிலையம்’, ‘பழங்கரை ஊராட்சி மன்றம்’ என்ற பழைய பெயரிலேயே வழங்கப்படுகிறது.

பழங்கரை ஸ்ரீமுன்தோன்றீஸ்வரரை வலம் வந்து வழிபாடு செய்யும்போது, நாம் வலம் வந்த பாதை ‘ஓம்’ என்ற மூலமந்திர வடிவில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். சிவாலயத்தின் வலதுபுறமாகச் சென்றால், அழகிய பெருமானாக அமர்ந்திருக்கும்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கோயிலின் மேற்கில், ‘ஆபத்து காத்த விநாயகர்’ அழகாக அமர்ந்த நிலையில் தரிசனமளிக்கிறார். இவருக்கு கிழக்குபுறத்தில் ‘அக்னி மாநதி’ என்ற ஆறு ஓடுகிறது. பல தருணங்களில் மழையினால் வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் திருக்கோயிலையும், ஊரையும் இந்த விநாயகர் காப்பாற்றியதால் ஆபத்து காத்த விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

ஆங்கிலேய அதிகாரி பெற்ற பேறு!
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில், வெள்ளைக்கார உயரதிகாரி ஒருவர், ஊர் நிர்வாகத்தின் பொருட்டு பழங்கரையில் முகாமிட்டிருந்தார். அப்போது விடாமல் சில நாட்கள் பெருமழை பெய்ததால், அக்னி ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டது. வெள்ளைக்கார அதிகாரியும், அவருடன் வந்திருந்த இதர அதிகாரிகள், சிப்பந்திகள் ஆகியோர் தங்கியி ருந்த கூடாரங்கள் அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது தங்களைக் காப்பாற்றும்படி அந்த விநாயகரை வேண்டி வழிபட்டார் அந்த ஆங்கிலேய உயரதிகாரி.
என்ன ஆச்சர்யம்! உடனடியாக ஆற்று நீர் விலகி வழிவிட்டது. அதனால் வியப்பும், மகிழ்ச்சியும், பக்தியும் மேலிட, அவ்விநாயகரை ‘ஆபத்து காத்த விநாயகர்’ என்று சொல்லி வணங்கினார். அதோடில்லாமல், அன்றுமுதல் இவ்விநாயகரின் பூஜை செலவிற்காக, நாள் ஒன்றிற்கு இரண்டு ரூபாய் நன்கொடை வழங்கவும் உத்தரவிட்டார் (இந்த உத்தரவு எண்:3136 ஙி.றி. நி.ளி.ழிஷீ: 1625 - தேதி : 25.11.1899). அந்தக் காலத்தில் இரண்டு ரூபாய் என்பது பெரிய தொகையாகும்.

அந்த உத்தரவின்படி இன்றும் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் மட்டும் இவ்விநாயகருக்கு வழங்கப்படுகிறது. இப்போதுள்ள விலைவாசிக்கேற்ப இந்த உதவித்தொகையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் பெரிய விரு ப்பமாகும்.

வைணவ - சைவ ஒற்றுமை!
வைணவ-சைவ சமயங்கள் இரண்டுமே இந்து சமுதாயத்தின் இரு கண்களாகும். இதற்கேற்ப பழங்கரை ஸ்ரீ முன்தோன் றீஸ்வரப் பெருமானின் திருக்கோயிலினுள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதனாக ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியி ருக்கிறார். காணக் காணத் திகட்டாத திவ்ய சேவை தந்தருள்கிறான் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.

இத்திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஆசி வழங்கி அருளியுள்ளனர் பேரூர் ஸ்ரீசாந்தலிங்கர் திருமடாலய தலைவரான சீர்வள ர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களும், அம்மடாலயத்தின் இளைய பட்டம் திருப்பெருந்திரு மருதாசல அடிகளார் அவர்களும். பழம்பெரும் இத்திருக்கோயில் பெருமானின் மீது சாந்தலிங்கர் தமிழ் கல்லூரி முன்னாள் முதல் வரான ந.இரா. சென்னியப்பனார், ஸ்ரீமுன்தோன்றீஸ்வரர் திருத்தாண்டகம் என்ற பதிகம் ஒன்றைப் பாடி அருளியுள்ளார்.

1500 ஆண்டுகளுக்கும் முந்தைய இத்திருக்கோயிலை தமிழக மக்களும், குறிப்பாக கொங்கு நாட்டு மக்களும் மறந்து விடக்கூடாது. நேரமும், வசதியும் கிடைக்கும்போதெல்லாம் கிடைத்தற்கரிய பொக்கிஷமான இத்திருக்கோயிலைத் தரிசித்துவர வேண்டும். பழங்கரை திருக்கோயிலின் தெய்வீகப் பெருமை அளவற்றது.

குறிப்பு : பழங்கரை திருக்கோயிலுக்கு அவிநாசியிலிருந்து வசதியாகச் சென்று வரலாம்.

Comments

Post a Comment